டபுள்மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்’,‘ 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர்’, ‘2021ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டது.
மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் விருது வழங்கி திரைக்கலைஞர்களை கௌரவித்து வருகிறது. 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்’ என்ற விருது ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜாவுக்கும், 2021 ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற விருது, ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், 2021 ஆண்டிற்கான சிறந்த பாடல் என்ற விருது ‘சைக்கோ’ படத்தை தயாரித்த டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, விருதினைப் பெற்ற படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம், விருதை பார்வைத்திறன் சவாலுள்ளவர்களுக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்தார்.
டபுள்மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் நாயகன் உதயநிதி பார்வைத்திறன் சவால் உள்ளவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.