சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகி பிரியங்கா மோகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் டான் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
இந்தப் படத்தில் நடித்தது என்னுடைய கல்லூரி நாட்களுக்கு திரும்பிச் சென்றது மாதிரி இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட் பயங்கர ஜாலியா இருக்கும். நிறைய திறமையான மனிதர்களுடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய துறுதுறுவென இருக்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். முதல்படம் முடிப்பதற்கு முன்பாகவே அடுத்த படமும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சிபி சாருக்கு நன்றி. டாக்டர் படத்திலேயே ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தது. இந்தப் படத்தில் கேங் இன்னும் பெரிதாகிவிட்டது.
ஜாலியாக பேசினாலும் என்கரேஜ் பண்ணுகிற மாதிரி மோட்டிவேஷனாகவும் சிவகார்த்திகேயன் பேசுவார். இயக்குநர் சிபி முதல் படம் இயக்குவது மாதிரியே இல்லை. அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதை நடிகர்களிடம் இருந்தும் வாங்கிவிடுவார். படத்தில் நடித்த அனைவருமே அனுபவமுள்ள நடிகர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து தினமும் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
நான் ரொம்ப வருஷமாவே அனிருத் ரசிகை. இப்ப அவர் இசையமைச்ச படத்துல நானும் நடிச்சிருக்கேன் என்பது ரொம்ப பெரிய விஷயம். படத்தில் சிவாங்கி என்னுடைய ஜூனியராக நடித்திருப்பார். ஷோவில் அவரை எப்படி பார்க்கிறோமோ, அதேபோலத்தான் துறுதுறுவென இருப்பார்.
டான் ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். ஃபேமிலி மட்டுமில்லாமல் காலேஜ் பசங்க, குழந்தைகள் என அனைவரும் விரும்பக்கூடிய படமாகவும் இருக்கும்.