உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், உலகிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் அந்த நாடே செய்வதறியாது திகைத்துவரும் நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில்...
''இந்த மோசமான சூழலில், மக்கள் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து தங்களால் முடிந்த உதவியை செய்வது மிக மிக முக்கியம். இளைஞர்கள் முன்னேற்றம், கல்வியில் வெற்றி பெறுவது ஆகிய இரண்டு காரணிகளும் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. ஜே.பி.எல். நிறுவனத்தில் உள்ள என்னுடைய சகாக்களின் உதவியோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஹெட்போன்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த சூழலை நாம் அனைவரும் சேர்ந்தே கடக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.