பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரேம். தற்போது அவர் செங்களம் வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ளார். அந்த வெப்சீரிஸில் நடித்த அனுபவங்களோடு பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
துணிவு படத்தில் ஒரு அஜித் போன்ற பெரிய ஸ்டாருடன் நடித்தது பெரிய விஷயம். படமும் பெரிய வெற்றி பெற்றதால் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இயக்குநர் வினோத்துக்கு நன்றி. ராஜா குடும்பத்தில் இருந்து வந்ததால் நடிப்பதற்கு குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. சிறுவயதிலிருந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதனால் நடிக்க வந்தேன். அதேபோன்ற கனவு என்னுடைய மகனுக்கும் இருந்ததால் இப்போது அவனும் நடிக்க வந்துள்ளான்.
நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியலிலும், குங்குமப்பொட்டு கவுண்டர் படத்தில் சத்யராஜ் சாரின் மகனாகவும் சிறுவயதிலேயே அவன் நடித்திருக்கிறான். துணிவு படத்தில் போட்டிருந்த கண்ணாடி இப்போது மும்பை சென்றுவிட்டது. எனக்கும் வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று இருக்கிறேன். பார்ப்போம்.
2009 காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதங்கள் வேலையே இல்லாத சூழ்நிலை இருந்தது. மிகப்பெரிய போராட்டம் அது. அப்போது திடீரென்று ஒரு கன்னடப் பட வாய்ப்பு வந்தது. அடுத்த நாள் அந்தப் படத்துக்காக கம்போடியா சென்று நடித்தேன். அதேபோல் வந்தது தான் துணிவு பட வாய்ப்பும். அடுத்த நொடி என்னவாகும் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
துணிவு படத்தில் எனக்கு முதல் நாள் ஷூட்டிங்கே அஜித் சாருடன் தான். சண்டைக்காட்சியை எடுத்தார்கள். அவரோடு பழகும்போது அவர் அவ்வளவு பெரிய ஸ்டார் என்பதை நாம் உணரவே முடியாது. மிகவும் எளிமையாக இருப்பார்.
மக்களோடு அமர்ந்து பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் அலாதியானது. படம் பார்ப்பது, பார்த்த பிறகு ரசிகர்கள் நம்மோடு வெளியே வந்து போட்டோ எடுத்துக்கொள்வது என்று அந்த அனுபவத்திற்கு ஈடு இணையே இல்லை. அந்த அனுபவம் ஓடிடியில் கிடைக்காது. மற்றபடி எல்லாம் ஒன்றுதான். மொழி போன்ற தடைகளையும் ஓடிடி உடைத்துள்ளது. சுழல் சீரிஸ் எனக்கு அவ்வளவு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதற்கான இரண்டாம் பாகம் வரவும் வாய்ப்பிருக்கிறது.