அஜித், விஜய் இருவருக்கும் முன்பு இளைஞர்களின் நாயகனாகவும் இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்தவர் பிரஷாந்த். தோற்றத்தில் 'சாக்லேட் பாய்' போல இருந்தாலும் இவருக்கு தென் தமிழகத்தில் இருந்த ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையும் வியக்க வைப்பது. பொதுவாக தமிழ் சினிமா நாயகர்களின் ஆசையாக, மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்கவேண்டும் என்பது இருக்கும். இந்த ஆசையை தங்கள் பேட்டிகளில் வெளிப்படுத்தாத இளம் நாயகர்கள் குறைவு. அப்படியிருந்த சூழலில் மணிரத்னம், ஷங்கர் மட்டுமல்லாமல் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்திலும் பாலச்சந்தர் தயாரிப்பிலும் நடித்த பெருமை இவருக்குண்டு. திருடா திருடா, ஜீன்ஸ் என க்ளாஸாகவும் தமிழ், வின்னர் என மாஸாகவும் ஜெயித்தவர் பிரஷாந்த். இவரது வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் மிகப் பிரபலமானவை. இப்படி தமிழ்சினிமாவில் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்த பிரஷாந்த், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும், திரைவாழ்வில் ஏற்பட்ட சில தோல்விகளாலும் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியிருந்தார்.
இடையில் சில படங்கள் வெளிவந்தாலும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்படி 90ஸ் கிட்ஸின் நாயகனான 'டாப் ஸ்டார்' பிரஷாந்த் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான அவரது 'ஜானி' படத்தின் ட்ரைலர் ஓரிரு நாட்களிலேயே ஒரு மில்லியன் (பத்து லட்சம்) வியூஸைக் கடந்தது. தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிப்பில் வெளியாகவுள்ள 'வினய விதேய ராமா' படத்தின் டீசரில் ராம் சரணுடன் நம் பிரஷாந்த் இருந்தது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. இப்படி, ஒரு பெரிய 'கேப்' (இடைவெளி) விட்டாலும் ரசிகர்கள் அன்பில் டாப்பில் இருக்கிறார் பிரஷாந்த். நல்ல படங்களில் முக்கிய வேடங்கள் தேர்ந்தெடுத்து நடித்தால், அரவிந்த் சாமி, மாதவன் போல மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்.