ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஃபிங்கர் டிப் வெப் சீரிஸ், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த சீசன் தற்போது உருவாகியுள்ளது. பிரசன்னா, ரெஜினா கெசண்ட்ரா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது சீசன், ஜுன் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் பிரசன்னா, “கோவிட் லாக்டவுனில் இருந்தபோது ஜி5 ஓடிடியில் ஃபிங்கர் டிப் சீரிஸ் பார்த்தேன். அதில் இருந்த ஒவ்வொரு கதையுமே ரொம்பவும் அழுத்தமாக இருந்தது. யார் இயக்குநர் என்று பார்க்கையில் சிவகர் என்று பெயர் போட்டிருந்தது. அடுத்த இரண்டாவது நாளில் சிவகரிடம் இருந்து உங்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்று எனக்கு மெசேஜ் வந்தது. கரோனா காரணமாக என்னால் வெளியே எங்கும் வரமுடியாது என்று சொன்னதால் ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பிவைத்தார். கதை படித்ததுமே எனக்கு பிடித்திருந்தது.
ஒவ்வொரு நாள் ஷூட்டிங் கிளம்பும்போதும் இன்னைக்கு என்ன எடுக்கப்போறோம் என்று ஆர்வமாக இருக்கும். அதற்கான சூழலை இயக்குநர் சிவகர் ஏற்படுத்தியிருந்தார். இன்னைக்கு போன் தான் எல்லாமே என்று நம்முடைய வாழ்க்கையே மாறிவிட்டது. போனில் நாம் பயன்படுத்தாத விஷயங்களே இல்லை. ஒரு மணி நேரம் போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டால் வாழ்க்கையே கைநழுவிப்போகிற மாதிரியான படபடப்பு ஏற்படுகிறது.
மொபைல் போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்று மாறிவிட்ட சூழலில், இந்த மொபைல் போனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. அது பற்றி ஃபிங்கர் டிப் 2 விரிவாகப் பேசும். குற்றங்களைக் கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருக்குறது என்றுதான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். சிசிடிவி கேமராக்களை வைத்து எவ்வளவு குற்றங்கள் நடக்கிறது என்பதை ஃபிங்கர் டிப் 2 பேசும். கதையாகப் படிக்கும்போதே அந்த விஷயம் எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த சீரிஸ் பார்த்த பிறகு இனி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்குமே ஏற்படும்.
ஃபிங்கர் டிப் 2 ஜூன் 17 வெளியாகவுள்ளது. நிறைய விஷயங்கள் மெனக்கெட்டு பண்ணியுள்ளோம். மக்களிடம் அது எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளோம். இந்த சீரிஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.