தெலுங்கில் வெளியான படத்தை தமிழில் ‘சிவகாமி’ என டப் செய்து, விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்ற கான்செப்டில் இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் ஜே.எம். பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியது. “நான் படத்தில் நடிக்கும் முன் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என நினைத்து நான் நடிக்க சென்றுவிட்டேன். ஆனால், அவர் சொன்னது நல்லதற்குதான் என பிறகு புரிந்துக்கொண்டேன். என்னுடைய கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார்.
லத்திகா என்றொரு படத்தில் ஹீரோவாக நடித்தேன். நானூறு நாட்கள் ஓடியது. மக்களும் அந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். வில்லனாக ஒரு படம் பண்ணுவோமே என ஆனந்த தொல்லை என்று படம் பண்ணினேன். நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். பிறப்பது ஒருமுறை, இறப்பது ஒருமுறை வாழும் வரை பேர், புகழுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு 40 கோடியை செலவு செய்தேன். என் குறித்து நல்ல விதமாகவும் எழுதினார்கள், கெட்டவிதமாகவும் எழுதினார்கள். பரவாயில்லை, நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன்.
ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரமாக கட்சி தொடங்குங்கள். அந்த கட்சியில் என்னை சேர்த்து கொள்ளுங்கள், என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால், நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள்” என்றார்.