பண்டிகை நாட்களில் படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் தனிக் கவனம் பெறும் நிலையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் அந்த நாளையே அதிகம் குறிவைப்பார்கள். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலுக்கு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஷங்கர் - ராம் சரணின் கூட்டணியின் கேம் சேஞ்சர் முதலில் இணைந்தது. பின்பு அருண் விஜய் - பாலா கூட்டணியில் உருவான வணங்கான் வெளியாவதாக அறிவித்தது.
அதே போல் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட்-பேட்-அக்லி படமும் பொங்கல் ரேசில் இணைவதாக முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆனால் சமீபகாலமாக இப்படம் தள்ளிப்போவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனிடையே இப்படத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட அஜித் படமான விடாமுயற்சி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் திடீரென படத்தின் டீசர் வெளியாகி பொங்கல் வெளியீடாக இருக்கும் என அறிவித்தது. ஆனால் அதன் பிறகு படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் மற்றும் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்பது இடம்பெறவில்லை. இதனால் படம் பொங்கல் ரேஸில் இருந்து இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் பொங்கல் ரேசில் புதிதாக நிறைய படங்கள் வெளியாகவுள்ளது. விடாமுயற்சி தள்ளி போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த படங்கள் திடீரென இணைந்துள்ளது. அந்த பட்டியலில் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ், சண்முக பாண்டியனின் படை தலைவன், மிர்ச்சி சிவாவின் சுமோ, மலையாள நடிகர் ஷேன் நிகாமின் மெட்ராஸ்காரன், கிஷன் தாஸின் தருணம் ஆகிய படங்கள் இருக்கிறது. மொத்தமாக 8 படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.