90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் கதையை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டி ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "போபால் மக்கள் என்றால் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்கள்' என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போபாலை சேர்ந்த ரோகித் பாண்டே என்பவர் மும்பையில் உள்ள வெர்சோவா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.