உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படம், சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷன் ஆனது. இந்த நிலையில் அந்த பிரிவில் வென்று ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்திய மொழி படங்களில் முதல் முறையாக ஆஸ்கர் விருதை வாங்கி சாதனை படைத்துள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' படம். மேலும் இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவை சார்ந்த இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதினை வாங்கியுள்ளார்.
இதற்காக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி ஆஸ்கர் வென்ற 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டு நாட்டு பாடல் உலகளவில் புகழ்பெற்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறும் ஒரு பாடல். இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்துக்கு இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers), ஆவணக் குறும்படப் பிரிவில் போட்டியிட்ட நிலையில் அதுவும் தற்போது ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. இந்த விருதினை கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி , "இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் அற்புதமாக எடுத்துரைக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to @EarthSpectrum, @guneetm and the entire team of ‘The Elephant Whisperers’ for this honour. Their work wonderfully highlights the importance of sustainable development and living in harmony with nature. #Oscars https://t.co/S3J9TbJ0OP— Narendra Modi (@narendramodi) March 13, 2023