இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் புதுச்சேரிக்கு சென்றிருந்த பார்த்திபன் அங்கு, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது திரைப்படங்களுக்கும் சின்னத்திரை படப்பிடிப்பிற்கும் கட்டணங்கள் குறைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தியாளர்களின் பல்வேறூ கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “இது தவிர்க்க முடியாது. ரஜினி வரும் போது, அவர் வந்து என்ன பண்ணப் போகிறார் என தோன்றியது. கமல் வரும் போதும் அப்படித்தான். விஜய் வரும் போதும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய எழுச்சி பிரமாதமாக இருக்கிறது. முதல் மேடையிலேயே பிரமாதப்படுத்திவிட்டார். அடுத்தடுத்து நல்ல முன்னேற்றங்கள் இருக்கிறது. அதே போல் அவர் தி.மு.க. வை எதிர்ப்பதுதான் சரியான விஷயம். அரசியலில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களை எதிர்த்தால் தான் ஹீரோவாக மாற முடியும். யார் வந்தாலும் அதைத் தான் பண்ணுவார்கள்.
எனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு. அது தனிப்பட்ட அரசியலாகத் தான் இருக்கும். நான் தனியாக கட்சி ஆரம்பிப்பேனே தவிர யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். புதிய பாதை படத்தில் இருந்து தொடங்கி எனது எல்லா படத்துலையும் அரசியல் இருக்கும். எளிய மக்களின் அரசியலுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். மறைந்த அமைச்சர் காளிமுத்து, ‘உங்களுடைய படமும் எம்.ஜி.ஆருடைய படமும் வேறு வேறு இல்லை. அவருடைய பாணி வேறு, உங்களுடைய பாணி வேறு’ என சொல்லியிருக்கிறார். அதனால் எனக்கும் அரசியல் விருப்பம் இருக்கு. ஆனால் இப்போது இல்லை” என்றார்.