'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெற்றி விழா நடத்தியது படக்குழு. அதில் பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது பா. ரஞ்சித் பேசுகையில், “நம்மள நம்புறவங்கதான் நம்மகிட்ட வருவாங்க. ஏன்னா... நான் பேசுகிற அரசியல் அப்படி. என்னை வெறும் ரஞ்சித்தாக மட்டும் வெளியில் பார்க்க மாட்டாங்க. சில பேர் அடையாள அரசியல் பண்றேன், சொந்த சமூகம் சார்ந்த ஆட்களிடமே வேலை பார்க்கிறேன் என சொல்றாங்க. ஆனால் எதையுமே நம்புறதில்லை. எனக்கு என்ன பிடிச்சிருக்கோ, என்ன தேவையோ அதைத்தான் தொடர்ந்து பண்ணிக்கிட்டு வரேன். என்னுடைய வேலையையும் அரசியலையும் முழுசா நம்புறேன். முதலில் என்னுடைய அரசியல் தான் நான். நான் நம்புகிற தத்துவம் என்னை சரியாக வழி நடத்தும். அதனால் யாரையும் நான் தேடி போனதில்லை. நான் பேசிய அரசியல் நிறைய பேரை என்னிடம் சேர்த்துள்ளது.
இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தபோது, பிரச்சனை வராதுன்னுதான் நினைச்சேன். ஆனால் சில பிரச்சனைகள் இருந்தது. நீலம் ப்ரொடக்ஷன் என்றாலே அங்க நிறைய பேர் அலர்ட் ஆயிடுறாங்க. படத்தை வெளியிடக் கூடாதுன்னு ஒரு கருத்து வந்துச்சு. வகுப்புவாத படமாக இருக்குது, மூர்த்தி படம் இருக்கிறது, அவர் ஒரு ரௌடி... என சொன்னாங்க. மூர்த்தி என்பவர் எங்களை படிக்க வச்சவர். எங்க ஊர்ல நிறைய பேர் படிக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம். அவரை எப்புடி ரௌடின்னு சொல்லலாம் என கேள்வி வந்தது. அதனால் படத்திற்கு சென்சார் தர மறுத்துட்டாங்க. அப்புறம் மறுபரிசீலனைக்கு அனுப்புனோம். அப்போது சில பெயர்களை மட்டும் மாத்த சொன்னாங்க.
இப்படம் ஒற்றுமை பேசுகிறது, வேறுபாட்டை எதிர்க்குது. இதுபோன்ற தத்துவம் உள்ள படத்தை வெளிவரக்கூடாது என தடை விதிக்க சொல்லக்கூடியவங்க தான் சென்சார் போர்டில் இருக்காங்க. அது ஒரு மோசமான சூழல். அதையும் மீறி இந்த படம் ரிலீஸாகி வெற்றியடைஞ்சிருக்கு” என்றார்.