"எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" படத்தை இயக்கிய கணபதி பாலமுருகனின் அடுத்த படம் லைசென்ஸ். இப்படத்தில் நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்னபோது தான் நான் நடிக்கத் தயாரானேன். ஏனென்றால் பெண்களுக்காகப் போராடும் ஒரு பெண்மணியைப் பற்றிய கதை திரையில் வருவதே அபூர்வம். மேலும் கதாநாயகியாக ராஜலட்சுமி நடிக்கிறார் என்று சொன்னவுடன் நான் கொஞ்சம் வியந்து போனேன். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் ஒரு இளம் வயது கவர்ச்சியான கதாநாயகியை வைத்துத்தான் இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கையை வைத்து புது கதாநாயகியைக் கொண்டு படத்தை தயாரிக்க முன்வந்ததே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி.
பாடலின் வழியாகவோ, நாட்டியத்தின் வழியாகவோ, ஒரு திரைப்படத்தின் வழியாகவோ நல்ல கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையின் வழியாக ஒரு நல்ல கலையை மக்களுக்கு கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்த இயக்குநர் கணபதி பாலமுருகன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக இயக்கி இருந்தார். ஒரு காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என பின்புல கதையை எடுத்துரைத்து அந்த காட்சியில் என்னை தொடர்புபடுத்திக் கொண்டு அழகாக நடிக்க காரணம் இயக்குநர் தான். என்னுடைய காட்சி நடித்து முடித்துக் கொண்டு வெளியூருக்கு செல்ல முற்படும்போது என்னை துரத்திக் கொண்டு வந்து மீதி பணத்தை செக் வாயிலாக கொடுத்தார் தயாரிப்பாளர்.
மேலும் இப்போதைய சூழ்நிலையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பெரிய பெரிய நடிகர்கள் பின்னால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஓடிக் கொண்டிக்கின்றனர். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குப் பின்பு நீங்கள் சொல்லும் பெரிய நடிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். அந்த படமும் வந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் ஒரு நல்ல கதை பற்பல ஆண்டுகளுக்கு பின்பும் காலத்தை வென்ற திரைப்படமாக இயங்கும். அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த லைசென்ஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.