பா. ரஞ்சித், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய பா. ரஞ்சித், "'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.
வெற்றிமாறன் சார், ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். இந்த மூன்று பேரும் இந்த விழாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் இருக்குறவங்க யாரும் ஒத்துக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர்தான் கூப்பிட்டு படத்தின் கலெக்ஷன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் தான் என் வாழ்நாளில் மறக்கக் கூடாதவர்கள் அனைவரும் இந்த இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிகத் திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்து கொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா 15 வருடம் முன் "பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா" என்று அனுப்பினார் .இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும்" எனத் தெரிவித்தார்.