
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் உடல் எடை குறைத்து இளமையாக இருந்தார். அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த மாதம் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு தெரிவித்தது. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ‘காட் ப்ளஸ் யூ’(God Bless U) லிரிக் வீடியோவுடன் நேற்று வெளியானது. இப்பாடலை அனிருத் பாடியிருக்க ராப் போர்ஷனை பால் டப்பா பாடியுள்ளார். ரோகேஷ் எழுதியுள்ள இந்த பாடலில் அஜித்தின் முந்தைய படங்களில் தலைப்புகள் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. குத்து பாடலாக அமைந்திருந்த இந்த பாடலில் அஜித் குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பாடலுக்கு நடன அமைப்பாளர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் ஹிட் பாடல்களான ‘ஆளுமா டோலுமா’, ‘அடிச்சி தூக்கு’ உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று யூட்யூபில் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்(இசை) லிஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.