
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மாற்றாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி பட கட்டங்களாகப் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ர் லுக் மற்றும் முன்னோட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதில் சாம்.சி.எஸ். மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ர் லுக் போஸ்டரில் சாம்.சி.எஸ். பெயர் இடம் பெற்றுள்ளது.
முன்னோட்ட வீடியோவில் ஸ்பையாக இருக்கும் கார்த்தி சீனாவில் ஒருவரைக் கொல்கிறார். அப்போது அந்த சீன நபர், கார்த்தியிடம், ‘உன் நாட்டை நோக்கி ஒரு பிரளயம் வந்துட்டு இருக்கு’ என சொல்ல எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் எண்ட்ரி கொடுக்கிறது. பின்பு கார்த்தி, அந்த சீன நபரிடம் ‘போர்னு வந்துட்டா உயிராவது...’ என்று சொல்கிறார். இதனால் இப்படம் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் இடையில் நடக்கும் பின்னணியைக் கொண்டு நகரும் என யூகிக்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.