இயக்குநர் பா.ரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு மூலம், பல பாடல்களைப் பாடி கவனம் பெற்றவர் ‘தெருக்குரல்’ அறிவு என்கிற அறிவரசு. மேலும் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடகி தீக்ஷிதாவுடன் இவர் இணைந்து பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் யூடியூப்பில் பல கோடி பார்வையாளர்களைக் கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று ராப் பாடகர் அறிவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'வள்ளியம்மா பேராண்டி' என்ற தலைப்பில் அவர் பாடிய 12 பாடல்கள் கொண்ட முதல் பாகம் ஆல்பம் வெளியானது
ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் ஆண்டனி தாஸன் மற்றும் 'தெருக்குரல்' அறிவு உடன் ஆல்பம் பாடல்களை பாடிய பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசுகையில் “அறிவு முதலில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையைப் பாடலாக பாடினார். நம்ம பயன்படுத்தக்கூடிய கலை என்பது அரசியல் தன்மையுடன் இருக்க வேண்டும். அந்த யோசனையுடன் இருப்பவர்களிடம் தான் வேலை செய்ய பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அடிப்படையில் அறிவு வந்தது மிகப்பெரிய வெளிச்சமாக நான் பார்க்கிறேன். இசை, மொழி வடிவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வில் அவர் எழுதிய பாடல்கள் மிகவும் சுவாரஸ்யமானது. அவரின் பாடல்வரிகளில் உள்ள அரசியல்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
என்னை அவர் பார்ப்பதற்கு முன்பு அம்பேத்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மாணவனாக இருந்தது எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை உண்டாக்கியது. அவரின் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மிகப்பெரிய பாய்ச்சலாக இருந்தது. அவரின் எழுத்து சாதாரணமானது இல்லை, பல தலைமுறைகளின் குரலையும், அரசியலையும் வார்த்தைகளாக மாற்றி குழந்தைகளிடம் கூட ஈசியாக ரீச் ஆனது, ஆனால் அதன் பிறகு அவருக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதிலிருந்து வெளிவர மனப்போராட்டத்தில் இருந்தார். அந்த போராட்டத்திற்கான பதில்தான் இந்த 12 பாடல்களைக் கொண்ட ஆல்பம்” என்றார்.