Skip to main content

'ராம் சார் கமெர்ஷியலாக வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கு' - பா.ரஞ்சித் 

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
pa ranjith

 

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், 'மெகா ஸ்டார்' மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் "பேரன்பு" படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் "பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்" பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிக்கையாளர் அ.குமரேசன், சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலந்துகொண்ட இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்....

 

"ஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பது செம்ம சூப்பரான ஒரு விஷயம். அதுவும் பி.எல்.தேனப்பன் மாதிரியான கமெர்ஷியலாக யோசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர் 'பேரன்பு' திரைப்படத்தை தயாரித்தது உண்மையிலேயே பெரிய விஷயம். ராம் சார், பி.எல்.தேனப்பன் இந்த காம்பினேசன் எப்படி அமைந்தது? என்றே யோசித்துக் கொண்டருந்தேன். எனக்கு ராம் சார் கமெர்ஷியலாக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை 'தரமணி' திரைப்படம் நிறைவேற்றியது. இப்போது 'பேரன்பு' திரைப்படமும் கமெர்ஷியலாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 'பேரன்பு' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியே வந்து ராம் சாரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். உண்மையிலேயே 'பேரன்பு' திரைப்படம் சரியாக திட்டமிடப்பட்டு, சரியாக எடுக்கப்பட்டு, சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சாதனாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. எந்த இடத்திலுமே நடிப்பு என்பது அல்லாமல் மிக இயல்பாக இருந்தது அவருடைய நடிப்பு. மம்முட்டி சாரும் மிக இயல்பாக நடித்து, அசத்தி இருக்கிறார். 'பேரன்பு' திரைப்படத்தின் முக்கியமான பலமாக நான் பார்ப்பது ஒளிப்பதிவைத் தான். நம் வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் எந்த பூச்சும் இல்லாமல் மிக எளிமையானவையாகத் தான் கடந்து போயிருக்கும்.

 

 

இதுவரையில் அப்படியான தருணங்களை யாரும் படம்பிடித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் அந்த அற்புமான தருணங்களை அதன் எளிமையான தன்மையோடு படம் பிடித்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்தது யுவன் சங்கர் ராஜா. பேரன்புவின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ராம் சாருக்கும், யுவனுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவ்வளவு அற்புதமான ஒரு இசை முழுமையாக வெளிவந்திருக்க முடியுமா? என்று  யோசிக்கிறேன். எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த காட்சியிலும் உறுத்தலே இல்லாமல் இரண்டு பேரும் உழைத்திருக்கிறார்கள். படத்தில் எனக்கு பிடித்த முக்கியமான கேரக்டர் மீரா பாத்திரம் தான். பொதுவாக தமிழ் சூழலில் திருநங்கைகள் மீது இருக்கக் கூடிய பார்வையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது அஞ்சலி அமீருடைய நடிப்பு. அவருக்கு எனது வாழ்த்துகள். மொத்தத்தில் பேரன்பு திரைப்படத்தை கூகையின் மூலமாக வாழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இப்போது சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது, அதை  பேரன்பும் உறுதி செய்திருக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வானவில்லைக் கோபத்தோடு வளைக்கும் தந்தை... பாடலாசிரியர் வேல்முருகன் கட்டுரை

Published on 14/02/2019 | Edited on 15/02/2019

மண்ணில் கால்வைக்க விரும்பாத தாவரம் ஒன்று உனது வீட்டுச் சுவரில் வளர்கிறது அது பூப்பதும் இல்லை காய்ப்பதும் இல்லை ஆனால் வளர்கிறது  வளரும் அதன் சுகத்துக்காக... 

                                                                                                                            – கவிஞர் ஞானக்கூத்தன்

 

pp

 

 

நோய் வாய்ப்பட்ட மனைவியை குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு ஓடிப்போகுற ஆண்களைப் பார்த்த சமூகத்திற்கு, வாய்ப்புக் கிடைத்தால் மூளை முடக்குவாதத்தால் பாதித்த பெண் குழந்தையை கூட விட்டுவிட்டு, இல்லை இல்லை கொன்றுவிட்டுக்கூட வேறொரு ஆணோடு ஓடிபோகக்கூடியவர்கள்தான் பெண்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக ‘பேரன்பு’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம்.

உணர்வுகளில் ஆண் பெண் திருநங்கை என்ற பேதமெல்லாம் இங்கு எப்போதும் இருந்ததில்லை, அதேநேரம் தேவதை, புனிதா என நாம் தங்கமுலாம் பூசி வைத்திருக்கும் பெண்கள் பற்றிய கற்பிதங்களை, ஜி. நாகராஜன் பார்வையில்  ‘மனிதர்கள் என்பவர்கள் மகத்தான சல்லிப்பையல்கள்’ என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார்.

கூலிப்படையை வைத்து கணவனைக் கொன்றுவிட்டு பிடித்த ஆணோடு வாழ்க்கையைத் தொடரும் பெண்கள் நிறைந்த நம் தெருக்களில், ஊர்களில், நகரங்களில் அதே கணவனுக்காக இன்னோர் ஆணுடன் நெருங்கி பழகி கல்யாணம் முடித்து காரியத்தை சாதிக்கும் பெண்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

 

pp

 

 

என்மகள் சோறு சாப்பிடாமல் பட்டினியாக கிடந்து படிப்பில் கவனம் செலுத்தியே துவண்டு போகிறாள்; ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் பெற்றும் அவள் விரும்பிய படிப்பில் சேர வாய்ப்பு கிட்டவில்லை என்று சாகத்துணிகிறாள் என்று வெத்து பெருமை பேசும்  நாம், அவள் உடலுறவுகொள்ள ஆசைப்பட்டு ஒரு ஆணை காதலித்தால் மட்டும் சாதிமதம் பார்த்து  கொன்று விடுகிறோம். இங்கு எல்லாருக்குமே  தேவைகள் இருக்கிறதென்பதை பொதுபுத்தியில் தொடர்ந்து  மறைத்து வருகிறோம்.

குறிப்பிட்ட நாளில் பொது இடங்களில் ஆண் நண்பனோடு பேசிக்கொண்டிருக்கும் பெண்களை மானப்பங்கம் செய்து தாலிக்கட்ட வைத்து ஒழுக்கச்சீலர்களாக காட்டிக்கொள்ளும் நம் அருகாமையில்தான், பைத்தியமாக தெருவில் சுற்றும் பெண் திடீரென புள்ளத்தாச்சியாக காணக்கிடைக்கிறாள்.

எத்தனையோ அம்மாக்கள் அல்லது பெண்கள் இந்த மாநகரத்தில் பேருந்துகளில், தெருக்களில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்துக்கொண்டுப் போவதைப் பார்த்து கசிந்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அப்படியாப்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டுப் போன எந்தவொரு ஆணையும்  இதுவரை பார்த்ததேயில்லை. அவர்களுக்கும் உடலுறவு மீது நாட்டம் இருக்கும் என்பதை ஒரு பெண் குழந்தையை முன்வைத்து நம்மோடு உறவாடியிருக்கும் இயக்குநர் ராம் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டவர்களாக இருக்கிறோம்.

தன் மகளுக்காக மம்மூட்டி அவர்கள் ஒரு ஆண் விபச்சாரனைத் தேடி  ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண் ‘நாங்க வயசான, முடியாத ஆண்கள் யாராக்காவது உதவி தேவைபடும் போது மட்டும் போவோம், ஆனால் அதேபோன்று தேவைபடும் பெண்களுக்கு இங்கே எந்த ஆணும் இல்லை’ என்கிறார். பெண்களுக்குதான் எவ்வளவு கொடூரமான தண்டனை.

நாளை இதுபோன்றொரு குறைபாட்டோடு பிறக்கும் ஒரு குழந்தைக்கு, அதன் உடல் தேவைக்கு நம்மிடையே இருக்கும் உபகரணம் என்னவென்பதை, அதுபோன்றவர்களை பேணிக்காத்தவர்களிடையே ஒரு  ஆய்வை நடத்தி பொது சமூகத்திற்கு அளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

கன்னிக்கழியாமல் செத்துப்போன உயர் ரக சாதியில் பிறந்த பெண் பிணங்களுக்கு கீழ்நிலை சாதியாக சொல்கிற  உயிருள்ள ஆண்களால்  உடலுறவு கொள்ள வைத்து கன்னிக்கழித்து அடக்கம் செய்தவர்கள்.  என்ற வரலாற்றில் வந்த நமக்கு இதற்கு தீர்வை தேடுவதில் சிரமமேதும் இருக்காதென்றே நம்புகிறேன். 

 

 

pp
 வேல்முருகன் பாடலாசிரியர்

 

ஒரு சராசரியான பெண்  தன்னோட உடல் தேவைக்கு  எந்த நேரத்திலும் ஒரு ஆணை தேர்ந்தெடுத்து இயங்க  முடியும். அதேநேரம் மூளை வளர்ச்சிக்குன்றிய ஒரு பெண்ணால் அது முடியுமா. இத்திரைப்படத்தில் ‘பாப்பா’வின் அம்மா ஒரு சராசரி பெண். பாப்பா மூளை வளர்ச்சிக்குன்றிய ஒரு பெண். அம்மா இன்னோர் ஆணுடன் சென்று உடலுறவு கொண்டு ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். பாப்பா தன்னோட  உடல் தேவைக்கு டீவியில் வரும் நடிகர் சூர்யாவின் நிழலுருவைப் பார்த்து முத்தம் கொடுக்கிறாள். அது மட்டும் போதுமானதாக இருக்குமா என்பதை நமது மனசாட்சியிடம் விட்டுவிடுவோம்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில், வெட்டவெளியென்று  வேகமாக பறந்து வந்த ஒரு பறவை ஜன்னல் கதவிலிருக்கும் கண்ணாடியில் மோதிகொண்டு வீழ்ந்து சாவதைப் பற்றி எழுதியிருப்பார். அதேபோன்று இத்திரைப்படத்திலும் ஒரு பறவை கண்ணாடிக்கு அப்பால் தெரியும் வெளியை நோக்கி பறந்து பறந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டு வெளியேறத்தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கும்.. அதே நிலைமைதான் இங்கு நமக்கும். வெட்டவெளி எது கண்ணாடி எதுவென்பதை கண்ணுள்ளவர்கள் கண்ணில்லாதவர்களுக்கு சொல்லவேண்டிய கடமை இருக்கிறது.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சராசரியான மனிதர்களைப் போன்று ஒழுக்கநீதி கல்லாதவர்கள். யாரும் பார்க்காதவாறுதான் சுய இன்பம் செய்யனும். மறைவாகத்தான் ஆண் பெண் கூடனும் என்பதை அறியாதவர்கள் என்று இன்னும் தெளிவுறக்கூறியிருக்கலாம்.

மம்மூட்டி அவர்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மகத்தான மனிதராக மிளிர்கிறார். மூளை முடக்குவாதம் ஏற்பட்ட பெண்ணாக நடித்த சாதனாவிற்கு எதிர்காலம் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும்.

 

 

 

Next Story

"பேரன்பு படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிஜம்"

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

42 வயது சிறப்பு பெண் குழந்தையின் தாய் மரியா, தன் குழந்தையின் நிலையை கண்டபிறகு அதைக்குறித்து தேடிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான அமைப்புகளில் பணியாற்றி, பின் தனியாக சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியையே துவங்கியிருக்கிறார். தன் மகளுடன் பேரன்பு படத்தை பார்த்த மரியா, திரைப்படம் குறித்தும் அதன் மீது வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட நேர்காணல் இது.