Skip to main content

“ஒரு அம்பேத்கரியராக குரல் எழுப்பி வருபவர்” - பா. ரஞ்சித் கண்டனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

pa ranjith Condemnation tweet about Chandrashekhar Azad

 

உத்தரப் பிரதேசத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர் நேற்று தனது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தியோபந்த் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம கும்பல் சந்திரசேகர் ஆசாத் வந்த காரை நோக்கிச் சுட்டுள்ளனர். அதில் ஒரு குண்டு ஆசாத்தின் வயிற்றில் பாய்ந்துள்ளது. மீதி நான்கு குண்டும் காரின் கதவில் பாய்ந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஆசாத்தின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். இதனைத்  தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளது. 

 

இதையடுத்து ஆசாத் தியோபந்த்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது ஆசாத் அபாய கட்டத்தைத் தாண்டி, நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆசாத்தின் மீது நடத்தப்பட்ட தக்குதலைக் கண்டித்து பீம் ஆர்மி, உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பட்டப் பகலில் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது சாதியக் குற்றச் செயலாகும். ஒரு அம்பேத்கரியராக, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சாதி அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருபவர் ஆசாத். 

 

ஒரு பட்டியலின அரசியல் பிரமுகராக, ஆசாத் தோட்டாக்களுக்கு ஆளாகியிருப்பது, மாநிலத்தில் நிலவி வரும் சாதிவெறி மற்றும் சட்டம் ஒழுங்கு தோல்வியின் அடிப்படைப் பிரச்சனையை அம்பலப்படுத்துகிறது. அம்மாநில முதல்வர் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த வேண்டும். சாதி வெறியர்களைக் கைது செய்யக் கோருகிறேன் மற்றும் என் சகோதரர் ஆசாத் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்