இயக்குநர் பா.ரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு மூலம், பல பாடல்களைப் பாடி கவனம் பெற்றவர் ‘தெருக்குரல்’ அறிவு என்கிற அறிவரசு. இவர் தற்போது 'வள்ளியம்மா பேராண்டி' என்ற தலைப்பில் 12 பாடல்கள் கொண்ட முதல் பாகத்தின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அவர் நடத்தவிருக்கும் நினைவேந்தல் பேரணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தப் பேரணி ஒரு தீர்வை நோக்கி நகர்வதற்கான முன்னெடுப்பு. சட்டரீதியாக விசாரித்து சரியான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனையைக் கொடுக்க வேண்டும். பல பேர் இந்தக் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காக காத்திருக்கிறோம். நான் எனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி கேட்டப் பிறகு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பார்க்கிறேன். ஆனால் என்கவுண்டர் என்பது ஆக்கபூர்வமான விஷயம் இல்லை. அதை ஆதரிப்பதும் இல்லை. வழக்கு தொடர்பாக தீர விசாரித்து சரியான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தான் சரியான வழிமுறை என நினைக்கிறேன்.
சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் காவல்துறையின் விசாரணையை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறோம். உண்மை நிலை தெரியவரும் போது, அதில் சந்தேகம் இருந்தால் அடுத்தகட்ட முடிவை எடுப்போம். எல்லா ஆட்சியிலும் பட்டியிலின மக்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. அவர்கள் தாக்கப்படுவதும், அவர்களது பிரச்சனைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதன் மேல் மிகப்பெரிய விமர்சனம் எங்களுக்கு இருக்கிறது. அதை தொடர்ச்சியாக நாங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இதற்காக பட்டியலின மக்கள் ஆணையம் உருவாக்குவது மட்டும் போதாது. அதோடு இதற்கான விழிப்புணர்வு சரியான அளவு இல்லை. குறிப்பாக ஆட்சி அதிகாரிகளிடம் அதிகாரம் இருக்கிறதா அல்லது அரசியல் ரீதியான ஆட்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது எங்களுக்கு கேள்வியாக இருக்கிறது. இது இரண்டுமே ஒன்னு சேர வேண்டும் என நினைக்கிறேன். ஆட்சி அதிகாரிகள் நிர்வாக ரீதியாக இது போன்ற பிரச்சனைகளை கையாள வேண்டும். இதுவே அரசியல் ரீதியாக போகும் போது, அது ஓட்டாக மாறுகிறது. அப்படி மாறும் போது இவர்களுக்கு ஆதரவாக நாம் முடிவெடுக்கக்கூடாது என்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அதிகாரிகளுக்கு அந்தத் தேவை இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களிடம் நிற்க்க வேண்டும் என்பதைத்தான் சட்டம் சொல்கிறது. அதை சரியான அளவில் அதிகாரிகள் முன்னெடுத்து போக வேண்டும்” என்றார்.