தெற்காசிய குறும்படப் போட்டியுடன், மிக பிரமாண்டமாக மூன்றாம் ஆண்டில் “ஊட்டி திரைப்பட விழா” வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழா குறித்து ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு.பாலநந்தகுமார், செயலாளர் பவா செல்லதுரை, திரைப்பட விழா இயக்குநர் திரு.மாதவன் ஆகியோர் கூறியதாவது...
திரைப்பட ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இதமான பருவநிலையில், சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுப்போட்டிகளுடன், இந்தியா, இலங்கை, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90 குறும்படங்கள் இந்தாண்டு திரையிடத் தேர்வாகியுள்ளது. இவ்விழா நூற்றைம்பது ஆண்டு பழமையான ‘அசெம்ப்லி ரூம்ஸ்’என்ற திரையரங்கில் நடைபெறுவது பார்வையாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும். தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மிக எளிதாக ஒன்றுகூட வசதியாக ஊட்டி உள்ளதால், இது தென்னிந்தியாவின் குறிப்பிடும்படியான ஒரு திரைப்பட விழாவாக வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.
• தெற்கு ஆசிய துணைக்கண்டத்தில் தரமான குறும்படங்களை ஊக்குவித்தல்
• குறும்பட கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் தயாரிப்பளர்களையும் இணைக்கும் மேடையினை உருவாக்குதல், கலந்துரையாடச் செய்தல்
• இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச தரத்தில் குறும்படங்களை கண்டு ரசித்து அவற்றைப்பற்றிய விவாதத்தில் பங்குகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குதல்
• தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுதல்
• தமிழ குறும்பட துறையை மேலும் வலுப்பெற செய்தல்
போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்விழாவை ஒருங்கிணைத்து முன்னெடுப்பது ஊட்டி திரைப்படச் சங்கம்.
மூன்று நாட்களுக்குள், ஒவ்வொரு நாளும் 10 மணிநேர திரையிடல் நடக்கும். கூடவே மற்றொரு அரங்கில் ஒவ்வொரு காலை மாலை என 2 அமரவுகள் சிறப்பு திரைப்பட வல்லுநர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களுடன் கலந்துரையாடல் என விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அளவிலான சிறந்த குறும்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பதோடு, அந்தந்த நாடுகளைச் சார்ந்த இளம் திரைப்பட ஆர்வளர்களைச் சந்தித்து உரையாடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
இந்தாண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர் திரு. ஜாய் மேத்யூ தலைமையிலான குழு பரிசுக்குறிய படங்களைப் பார்த்து தேர்வு செய்ய உள்ளது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், ரஞ்சித், சீனுராமசாமி, ஜீவா சங்கர் ’நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன், ’பரியேறும் பெருமாள்’பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ’96’ பட இயக்குநர் பிரேம்குமார், மேற்குத் தொடர்ச்சிமலை பட இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான திரு.அஜயன்பாலா ஆகியோருடன் இன்றைய தமிழ் திரைப்பட உலகின் நம்பிக்கைகுறிய இளம்படைப்பாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.
கடைசி நாளான டிசம்பர் 9-ம் தேதியில் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளைக் வழங்கி கௌரவிக்கவுள்ளார். திரைப்பட ரசிகர்கள் தங்கள் வருகையை www.ootyfilmfestival.org என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி திரைப்படச் சங்கத்தின் பொருளாளரும், அயல் சினிமா இதழாசிரியருமான திரு.வேடியப்பன் அவர்களை 9600156650 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.