கனடாவைச் சேர்ந்த நடிகை நோரா பதேகி. இவர் தமிழில் கார்த்தி நடித்திருந்த தோழா படத்திலும், பாகுபலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகு ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடி வரும் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் நடிகைகளை சினிமாத் துறையிலுள்ள சிலர் மோசமாகவே கையால்வதாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் நோரா பதேகி.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சினிமா வாய்ப்பு தேடும்போது தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி கூறினார். அதில், “இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வாழ்வது எளிதான ஒன்று அல்ல. அதுவும் நடிகைகளான நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம். நாங்கள் படும் கஷ்டம் மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். என்னிடம் இருந்து பணம் பறித்திருக்கிறார்கள்.
என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி என்னை மிக மோசமாக நடத்தினார்கள். அவர்களிடமிருந்து நான் வெளியேற நினைத்த போது, என்னுடைய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க மாட்டோம், என்று மிரட்டினார்கள். பிறகு 8 பெண்களுடன் ஒரே அப்பார்ட்மெண்டில் என்னை தங்க வைத்தனர். அந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்த போது அதிர்ச்சியடைந்தேன்.
எனது பாஸ்போர்ட்டை அங்கிருந்தவர்கள் திருடிக்கொண்டனர். அதனால், என்னால் மீண்டும் கனடாவுக்கு செல்ல முடியவில்லை. நான் அங்கு வசித்ததெல்லாம் பெரிய கொடுமை. பட வாய்ப்புகளுக்காக நான் அனுபவித்த கொடுமைகளை எண்ணி பலநாட்களாக தூங்காமல் தவித்துள்ளேன்” என்று தன்னுடைய துயரங்களை கூறியுள்ளார். இந்த பேட்டி பாலிவுட் வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.