மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனான் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் படம் சைக்கோ. த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம், வெற்றிகரமாக ஓடியதால் நேற்று நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தியது படக்குழு. அப்போது அதில் படத்தில் நடித்த உதயநிதி, நித்தியா மேனன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நித்தியா மேனன், “எனக்கு இந்த படம் வெற்றிகரமாக ஓடியது என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் எனக்கு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்களும், நியாயமாக எடுக்கும் படங்களும் பிடிக்கும். பெரியளவில் காசைபோட்டு வேஸ்ட் செய்யாமல் நன்றாக படம் பண்ணனும், அதேபோல எதார்த்தமாகவும் இருக்க வேண்டும். இப்படி எடுக்கப்படும் படங்கள் நன்றாக ஓடும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மிஷ்கின் ஒரு நியாயமான மற்றும் உண்மையான இயக்குனர். அவருடன் பணியாற்றியது என்பது ஒரு சிறந்த அணுபவமாக இருந்தது. ஒரு நடிகருக்கு அது நிறைய சந்தோஷத்தை அளிக்கிறது. ஒரு பேராபிளெஜிக்காக நடிக்கிறேன் என்றால் கண்டிப்பாக 100% சரி என்று நடிக்க ஒப்புக்கொள்வேன். ஏனென்றால் அது உற்சாகம் அளிக்கும். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அதிக கெட்ட வார்த்தைகள் பேசுவதுபோல இருக்கும். படம் நடிக்கும் தொடக்கத்தில் மிஷ்கினிடம் ‘சார், வாழ்க்கைல இந்த மாதிரி வார்த்தையெல்லாம் பேசினது இல்லை’ என்று சொன்னேன். அதில் ஒருசில வார்த்தைக்கெல்லாம் என்ன அர்த்தம் கூட தெரியாது. அவரிடம் கேட்டதற்கு ‘வேண்டாம் தேவையில்லை. நீ சொல்லிடு’ என்றார். மிஷ்கின் சார் இயக்குகிறார் என்பதாலயே இந்த கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன்.
சைக்கோ படத்தில் நடித்தவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இருந்தோம். படக்குழுவின் என்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.