ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு, அந்தச் செய்தியை தங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும் என மூன்று தனியார் செய்தி சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், இது தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரது காதலியான ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருள் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் சிபிஐ-யின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அதன் பிறகு, பாலிவுட் சினிமா உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இதனையடுத்து, போதை மருந்து தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையின் போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை ரியா கூறியதாக தகவல் வெளியாகின. இத்தகவலை, சில முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டன. இதனை எதிர்த்து ரகுல் ப்ரீத் சிங் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை தான் பயன்படுத்தவில்லை என்று ரியா கூறியதையடுத்து, ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு, அந்த செய்தியை தங்கள் சேனலிலேயே வெளியிட வேண்டும் என அச்செய்தியை வெளியிட்ட மூன்று தனியார் செய்தி சேனல்களுக்கு, செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சில தனியார் சேனல்களுக்கு, இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியை இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.