துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருடைய கண்ணோட்டத்தில் சைக்கோ என்பவர்கள் எந்த மாதிரியானவர்கள் என கேள்விகேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மிஷ்கின், “நாம் சைக்கோ என்று யாரையெல்லாம் சொல்கிறோம் என்று பார்த்தால் அதீத உணர்வை வெளிப்படுத்துபவர்களை சைக்கோ என சொல்கிறார்கள். என்னையவே சைக்கோ என்று சொல்கிறார்கள். ஒரு பெண்ணை ஒருவர் ஆழமாக காதலித்தால் ‘என்னடா சைக்கோத்தனமா இருக்க’ என்கிறோம். அதன் அர்த்தம் சைக்கோவே கிடையாது. அது ‘மன பிறழ்வு’, சைக்கோ பாத்தாலஜிக்கலி அஃபக்டட். இப்போது ஒரு பெண்ணை ஆழமாக காதலித்தோம் என்றால் சைக்கோ என்று அவரை அழைக்கும் வார்த்தை மிகவும் தவறானது. அந்த மன பிறழ்வு எப்படி ஏற்படுகின்றது என்றால் 14 வயது முதல் 18 வயது வரை ஒரு மனிதனின் முன் மூளையில் எதாவது அடிப்பட்டால் இவ்வாறு ஏற்படும். அந்த பகுதியில்தான் பல எமோஷன்கள் இருக்கிறது. நாம் பரிதாப்படும் எமோஷனும் அந்த பகுதியில்தான் இருக்கிறது. அதனால் அங்கு அடிப்பட்டவுடன் பரிதாப உணர்வு போய்விடுகிறது. உங்கள் கையில் இரத்தம் வருவதை பார்த்தால் நான் பதறிவிடுவேன். ஆனால், மனபிறழ்வு ஏற்பட்டவராக இருந்தால் அதை அப்படியே பார்த்துக்கொண்டே இருப்பார். ஏனென்றால் உங்களுக்கு அவருடைய வலி தெரியாது. இது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி நடக்கும். சில மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் அம்மா, அப்பா இல்லாமல் இதுபோல சிறு வயதில் சில கசப்பான விஷயங்கள் அவர்களுக்கு நேர்ந்திருக்கும். இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு வளர்பவர்கள்தான் பின்நாளில் ஒரு சைக்கோபாத்தாக மாறுகிறார்கள்.
இப்படி சைக்கோபாத்திற்கு இரண்டு தியேரிதான் இருக்கிறது. ஆனால், நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சைக்கோ இது இல்லை. என்னையே சைக்கோ என்கிறார்கள். ஆனால், நான் இதுவரை யாரையுமே கொலை செய்ததில்லை. இதை சொல்வதுதான் இந்த படம். ஒரு கார்ப்பரேட்டில் பணிபுரியும் மேலதிகாரி, இந்த வேலையை முடிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதை கார்ப்பரேட் சைக்கோபாத் என்கிறார்கள். நீங்கள் பாருங்கள் சேல்ஸ் வேலையில் இருப்பவர்கள் பலர் செயின் ஸ்மோக்கராக பலர் மாறிவிட்டார்கள். வேலைவிட்டு மாலை திரும்பியவுடன் மது அருந்துகின்றனர். அதேபோல ஆசைக்காட்டி, பாசம்காட்டி வளர்க்கும் பெண் வேறொரு மதத்தை, சாதியை சேர்ந்த பையனை காதலித்தால் அவளை கொல்கிறார்கள். இதெல்லாம் சைக்கோபாத்தான். இவர்கள் அதிகமாக அன்பு செலுத்துவார்கள். ஆனால், ஒரு அளவுகோளுக்கு அது வரும்போது எந்த எல்லைக்கும் போய்விடுவார்கள்” என்று கூறினார்.