முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணன், ஃபார்வர்டு (Forward) பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
எஸ்.எஸ்.ஆர். கண்ணன் பேசுகையில், "இப்படத்தில் என்னுடைய தந்தையார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வரக்கூடிய 6 காட்சிகள் இருக்கின்றன. அதில் நானே விக் அணிந்து நடித்திருக்கிறேன். தேவர், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, பெண் நர்ஸ் வேண்டாம், ஆண் நர்ஸ் தான் வேண்டும் என்றார். அதை என் தந்தை தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். தேவருடன் நெருங்கி பழகியவர்களில் என் தந்தையாரும் ஒருவர்” எனப் பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய நவமணி, "பெண் நர்ஸ் வேண்டாம், டாக்டர்கள் வேண்டாம் என எஸ்.எஸ்.ஆரை கூப்பிட்டு தேவர் சொன்னதாக கூறுவது, எஸ்.எஸ்.ஆருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் என் தேவரை அது சிறுமைப் படுத்தும் வார்த்தை. அப்படி ஒரு நிகழ்வே கிடையாது. இதனால் கோபமடைந்த எஸ்.எஸ்.ஆர். கண்ணன், "எங்க அப்பா சொல்வது பொய் என்று சொல்றியா...என்னடா தெரியும் உனக்கு, தேவருடன் பழகி இருக்கியா நீ" என நவமணியை தாக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். இதனால், மேடையில் சிறிது பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.