தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய அவர் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் மறவையொட்டி தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் காலைக் காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தயரிப்பாளர்கள் சங்கம் நாளை தமிழகத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.