ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில், 375 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நெல்சன் திலீப் குமார், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.
வசந்த் ரவி பேசுகையில், "ஜெயிலர் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக நான் பார்க்கிறேன்" என கூறினார். முதன் முதலில் நடிப்பதற்கு முடிவெடுத்த பின் ரஜினியை சந்தித்ததாகவும், அவரின் படங்களுக்கு ரஜினி பல முறை வாழ்த்து கூறியுள்ளதாகவும் வசந்த் ரவி தெரிவித்தார். தொடர்ந்து, "ரஜினி சாரோட ஒரு சீன் நடிக்க மாட்டோமா என நினைத்துள்ளேன். ஜெயிலர் படத்தில் நல்ல அப்பா மகன் உறவுள்ள கதாபாத்திரம் கிடைத்தது பெரிய பாக்கியம் தான்" என மனம் மகிழ்ந்தார். மேலும் "நெல்சன் இந்த படம் வெற்றியடைய கடின உழைப்பை போட்டார். அதுமட்டுமின்றி இந்த அர்ஜுன் ரத்னவேல் முத்துபாண்டியன் கதாபாத்திரத்தை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றி" என பேசி முடித்தார்.
பின்பு படத்தில் ஸ்வேதாவாக நடித்த நடிகை மிர்னா மேனன், "நெல்சன் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தார். படத்தில் நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதால் ஒப்புகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுதியுள்ளேன்" என குறிப்பிட்டார். ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்கள், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் போன்ற திரைப் பிரபலங்களுடன் நடிப்பது மிகப் பெருமையாக இருந்தது. படம் இன்றைக்கு இந்திய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் கேரளாவில் மக்கள் தங்கள் மொழிப்படம் போலவே பாவித்து ரசிக்கிறார்கள். இந்த மாதிரி அனுபவங்கள் எனக்கு புதிதாக இருந்தது" என்றார்.