Skip to main content

"எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார்" - மாரிமுத்து குறித்து மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

mari selvaraj about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 

அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ் பாஸ்கர், பிரசன்னா, சசி, கதிர், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மாரி செல்வராஜ், நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிச்சயமாக ஒரு பெரிய இழப்பு தான். இயல்பான கதையோட்டங்களை கொண்ட கிராம கதைகளை உருவாக்கக்கூடிய அல்லது எளிமையான கதைகளை உருவாக்க கூடிய  நிறைய இயக்குநர்களுடைய தேர்வாக அவர் இருந்தார். மேலும் முதல் பட இயக்குநருக்கு ரொம்ப சப்போர்டிவாக இருந்துள்ளார். தான் ஒரு சீனியர் இயக்குநர் என்பதை முதல் பட இயக்குநரிடத்தில் அவர் காண்பித்ததே கிடையாது. இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை இன்னும் மெருகேற்றுவதற்கு அவருடன் உரையாடி, ஒரு நெருக்கத்தை உண்டாக்கி பணியாற்றுபவர். 

 

நான் நிறைய தடவை கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கும் இப்போது படம் பண்ணிக்கிட்டு இருக்கிற நிறைய இயக்குநர்களுக்கும் ஒரு உறவு இருந்தது. என்னுடன் பரியேறும் பெருமாள் நடித்தார். அதன் பிறகு எந்த படமும் பண்ணவில்லை. ஆனால் வாரத்தில் ஒரு தடவையாவது பேசிவிடுவார். அவரை பற்றி ட்ரெண்டாகிற வீடியோக்கள் எல்லாம் அனுப்புவார். அதை நான் கிண்டலடிச்சிருக்கேன், அவரும் கிண்டலடிப்பார். அவருடன் சண்டை போட்டிருக்கிறேன். முரண் பட்டிருக்கிறேன். எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார். வாழ்க்கையில் என்ன வாங்கியிருக்கீங்க, செட்டில் ஆகிடீங்களா... எல்லாத்தையும் சேமிச்சு வையுங்க என சொல்வார்.

 

ஒரு இயக்குநரோட அழுத்தத்தை புரிஞ்சிகிட்டு, என்னோட அரசியலையும் புரிஞ்சுகிட்டு, பரியேறும் பெருமாள் படத்தில் மிக பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தார். படத்தில் கார் மேல் உட்கார்ந்து ஹீரோ பேசும் வசனம் அவர் தான் வைக்க சொன்னார். அதை காட்சியாக காட்டாமல் வசனத்தில் வையுங்கள் என்றார். அவர் சொன்னதை போல் வைத்தேன். அது எந்தளவு தாக்கத்தை உண்டாக்கியது என்று பிறகு தான் தெரிஞ்சது. கர்ணன், மாமன்னன் படத்தில் அவர் இல்லாதது வருத்தமாக இருந்தது என சொன்னார். அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார். நானும் அடுத்த படத்தில் நடிக்க வைக்க யோசித்து வைத்தேன். ஆனால் இப்படி ஆகும் என நினைக்கவில்லை. நல்ல சமுதாயத்தை விரும்பக்கூடிய மனிதரை இழந்துவிட்டோம்.  " என்றார்.   

 

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்