Skip to main content

“சுதந்திரமாக செயல்பட முடியவில்லை” - மாரி செல்வராஜ் ஆதங்கம் 

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
mari selvaraj about bison

நான்கு சிறுவர்களை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘வாழை’. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை (23.08.2024) வெளியாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.  

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ் தன்னுடைய படங்களின் பற்றிய விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “ஒட்டு மொத்த சமூகமும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் வாழை. என் இளமை பருவத்தில் நடந்த சம்பவம்தான் இந்த படம். படத்தின் க்ளைமாக்ஸ் மிகவும் முக்கியமான காட்சி. அதை மிகவும் சிரமப்பட்டு எடுத்தேன். அதற்காக மனவுளைச்சலுக்கும் ஆளானேன். அந்த வயதில் நான் பார்த்ததைத்தான் இப்படத்தில் பதிவு செய்துள்ளேன். 4 படம் பண்ணியுள்ளேன், அதில் கிடைத்த அறிவை இந்த படத்தின் கதைக்குள் திணிக்கவில்லை. இந்த சமூகம் இந்த படத்தைப் பார்த்த பிறகு, என்னுடைய பதிவை சொன்னால் சிறந்த முறையில் இருக்கும் என நினைக்கிறேன்.   

கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களின் மூலம் என்னுடைய பாடு பொருளை சொல்லும்போது இடத்திற்கு தகுந்த உணர்வு வெளிப்படும். நம் ஊரில் நிறைய வன்முறை படங்கள் வருகிறது. அதை சினிமா அனுபவமாக பார்க்கும் நீங்கள், நிஜ வாழ்கையில் இருந்து கதையை சொல்லும்போது அதே சினிமா அனுபவமாக பாருங்கள். நான் வன்முறையை காட்டினால் மட்டும் விமர்சிக்கின்றனர். மிகக் குறைவாகத்தான் வன்முறையை என் படத்தில் காட்டி வருகிறேன். ஆனால் மற்ற படங்களில் வன்முறை அதிகம் வந்தாலும் அதை சினிமா அனுபவமாகப் பார்க்கின்றனர். வருஷத்துக்கு 25 படம் வன்முறை காட்சிகளோடு வருகிறது. ஆனால் எளிய மனிதர்களின் சில கோபத்தை காட்டும்போது அதை சமூகத்திற்கு எதிரானது என சொல்லிவிடுகிறார்கள்.

அதனால் படைப்பாளியாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் மொத்த அனுபவத்தையும் திரைப்படமாக எடுக்கத்தான் வந்திருக்கிறேன். இலக்கியங்களை கற்று சினிமா எடுக்க வந்தபோதுதான் இந்த சமூகத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என்று புரிந்துகொண்டேன். அப்படிதான் திரைப்படம் எடுத்து வருகிறேன்” என்றார். மேலும் அவரது அடுத்தடுத்து படங்கள் குறித்து பேசுகையில், “துருவ் விக்ரமை வைத்து நான் எடுத்து வரும் பைசன் படம் 70 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது, 25 நாட்கள் படப்பிடிப்பு மட்டும்தான் உள்ளது. ரஜினிகாந்துடன் இணைந்து படம் பண்ண ஆசை இருக்கிறது. அவர் இதற்கு முன் நான் எடுத்த படங்களை பார்த்து என்னை பாராட்டியுள்ளார். அவரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்