மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர்.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மாரி செல்வராஜ், "என்னை சுற்றி உள்ள அனைவருமே அவர்களை நிரூபிக்க வேண்டும் என்றது நினைச்சதை விட நான் ஜெயிச்சரனும் என்று தான் ஆசைப்பட்டனர். நான் எப்படி செதுக்கப்பட்டாலும் என்னுடைய படைப்புகள் செதுக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன். என் படைப்புகளில் தெரிகிற மாரி செல்வராஜ் தான் நிஜம். அதை காப்பாற்றுவதற்காகத் தான் போராடிக் கொண்டே இருக்கிறேன். அனால் என் படைப்பை தாண்டி என் ஃபிலிம் லேங்குவேஜ் முக்கியம். இடைவெளி காட்சிக்கு பின்னால் ஒரு நிஜம் இருக்கு. அதை சொல்வதற்கு சரியான மேடை வரும் போது சொல்கிறேன். படத்தில் வரும் அந்த காட்சியை நாவலாக எழுத ஆசைப்பட்டேன்.
என்னுடைய அரசியல் எப்படி பேசப்பட வேண்டும். அதை எப்படி பேசினால் சாத்தியமாகும். அதை உதயநிதி என்ற அரசியல் ஆளுமை பண்ணும் போது குறைந்தபட்சம் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அது என்னை விட உதயநிதியிடம் அதிகமாக இருந்தது. ஒரு அமைச்சரை வைத்து படம் பண்ணும்போது அது வன்முறையாக மாறி விடக்கூடாது என பார்த்து பார்த்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டு எடுத்தேன்.
என் படத்தில் வாள் வருவது என்பது அது என்னிடம் இருக்கிறது என்பதை பதிவு செய்வதே தவிர மற்றவர்களை வெட்டுவதற்காக அல்ல. உதய் சாருக்கு நான் ஒரு தப்பான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவரை பின்பற்றுகிற மக்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த பாதையை காண்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்துத்தான் வாள் காட்சி வைத்தேன். நான் என் படைப்பை விட சிதைக்கப்படுவேன் என்று நன்றாக தெரியும். அதுவே சிலருக்கு ரொம்ப பிடிக்கும். நான் எவ்ளோ அவமானப்பட்டாலும் பரவாயில்லை. மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்க ரெடியாக இருக்கேன். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அதிகம் மன்னிப்பு தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் பண்ணினது பிழை என்று நினைப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது பிழை இல்லை என நினைப்பவர்களுக்கு என்னுடைய நன்றி" என்றார்.