2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு பேசியது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிரது. அவர் பேசியதாவது, “நெய்வேலிக்கு அருகே ஒரு படப்பிடிப்பில் உள்ளேன். நூற்றுக்கணக்கான பேர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். ஒரு அரசியல்வாதி என்ற பெயரில் ஈனத்தனமான கேவலமாக அறுவறுக்கதக்க வகையில் என் திரைத்துறையிலே உள்ள சக நடிகைகளை, சகோதரிகளை, என் பெண் குடும்பத்தாரை... எங்கள் துறையில் உள்ளவர்களை யார் குறை கூறினாலும் அது எங்களையும் சாறும். ஆண் வர்க்கத்திற்கும் அதில் பங்கு உண்டு. அந்த அறுவறுக்கதக்க வகையில் பேசிய நபர் மிகவும் வருத்தப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்கிறார். திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் ஒருவருக்கொருவர் சமத்துவமடைந்த இந்த சமூகத்தில், மிகவும் கீழ்த்தரமான விமர்சனம் செய்திருப்பதாக கேள்விப் பட்டேன்.
அது வன்மையாகக் கடுமையாகக் கண்டிக்கப் பட வேண்டிய செயலாகக் கருதுகிறேன். அது யார் செய்திருந்தாலும் எனக்கு முகம் தெரியாது. இது போன்ற ஈனத்தனமான செயல்களில் வன்மம் பரப்புவது, செய்திருக்கக்கூடாது. சுயலாபத்திற்காகவா அல்லது எதற்காக செய்தார் என்று தெரியவில்லை. போகிறபோக்கில் அப்படியெல்லாம் சக திரை நடிகைகளை கேவலமாகப் பேசியிருப்பது, எனக்கு மிகவும் மனதை நோகச் செய்கிறது. இந்த சமுதாயத்தில் தன்மானமிக்க, மானத்தோடும், கௌரவத்தோடும் நடத்தப்படுகின்ற நடிகைகளை அவமதிக்கும் இது போன்ற பேச்சுகள் மிகவும் ஆபத்தானவை. அறுவறுக்கதக்கவை, இது நம் சமுதாயத்தை பாதிக்கும். உரியவர்கள் நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்” என்றார். இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, அவர் பேசியது தொடர்பாக வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.