மன்சூர் அலி கான், சினிமாவில் பயணித்து கொண்டே அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வந்தார். 1999ஆம் ஆண்டு புதிய தமிழகம் வேட்பாளராக பெரியகுளம் தொகுதியிலும், 2009 ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராகவும், 2019ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இப்போது இந்திய ஜனநாய புலிகள் என தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளார்.
இதனை டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியா முழுக்க தமிழர்கள் மத்தியில் ஒரு முன்னேற்றத்தையும் காணோம். தமிழர்களிடத்தில் முன்னேற்றம் இல்லை. ஒரு தமிழனை பிரதமர் ஆக்க முடியவில்லை. இந்தியா முழுவதுக்கும் உரிமை காக்க போராடுவதே நோக்கம். தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. நான் விடப்போறதில்லை. உண்டு இல்லைனு, பண்ணபோறேன். இனி அதிரடி அரசியல் தான். எங்களின் பாய்ச்சல் வேங்கை பாய்ச்சலாக இருக்கும். இந்தக் கட்சி தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல. 24ஆம் தேதி பல்லாவரத்தில் மாநாடு நடக்கிறது. அதில் நிறைய பேச இருக்கிறேன். 15000 பேர் இணைந்திருக்கிறார்கள். பொறுப்புகள் போட்டு வேலைகள் நடந்து கிட்டு இருக்கு” என்றார்.
மேலும், “நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கே உடன்பாடு இல்லை. என்னை நான் நடிகனாக நினைக்கவில்லை. 1991ல் தான் எனது முதல் படம் வருகிறது. ஆனால் 1987லேயே ஆதித்தனாரை ஒரு நாளிதழ் தவறாக போட்டுருந்தார்கள். அப்போது மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. அதில் கலந்துகிட்டேன். அப்புறம் காவிரி, இலங்கை உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டேன்” என்றார்.