தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, சமூக ஆர்வலர் என பல்வேறு பரிணாமங்களில் பயணித்தவர் மறைந்த நடிகர் மணிவண்ணன். கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்து 50 படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக இவரது நையாண்டி கலந்த அரசியல் வசனங்கள் மக்கள் மனதில் மிக பிரபலம். தமிழ் திரையுலகில் 30 வருடங்களுக்கு மேலாக தன் பங்களிப்பை தந்த இவர் மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் மணிவண்ணனின் நினைவு தினமான இன்று (15.06.2022) ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது நினைவஞ்சலியை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பட நடிகரும் மணிவண்ணனின் நெருங்கிய நண்பருமான சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "அன்பு நண்பன் மணிவண்ணனின் நினைவு நாள். என் தலைவனை நினைக்காத நாளில்லை. ஒரு வேளை நான் மறந்தால் கூட தமிழ் சினிமா அவரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். நான் படப்பிடிற்கு செல்லும் போதெல்லாம், எந்த மொழி படமாக இருந்தாலும் சரி, ஒரு நாளாவது என் தலைவனை பற்றி ஒரு டாபிக் வந்திரும்" என குறிப்பிட்டு மணிவண்ணனுடன் அவர் பணியாற்றிய முக்கியமான நிகழ்வுகளை பற்றி நெகிழ்ந்து பேசினார்.
மேலும் "தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு. மிகப்பெரிய சமூக சிந்தனையாளர். எனக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இல்லை. அவர் தான் படப்பிடிப்பின் போது மார்க்ஸ் பற்றியும் பொதுவுடைமை சித்தாந்தம் பற்றியும் உள்ளிட்ட பல விஷயங்களை என்னிடம் பேசுவார்" என உருக்கமாக சத்யராஜ் பேசியுள்ளார்.