Skip to main content

மோகன்லால் நடவடிக்கையால் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகள்...

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
dileep

 

'அம்மா' என்ற பெயரில் மலையாள நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 18 வருடங்களாக தலைவராக இருந்த நடிகர் இன்னசென்ட் எம்.பி உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து புதிய தலைவராக நடிகர் மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக பல்வேறு நடிகர்கள் சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கிடையே நடிகர் சங்க பொருளாளராக பதவி வகித்துவந்த நடிகர் திலீப் கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் திலீப் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. மேலும் நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டதாக கூறி அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து திலீப்பால் பாதிக்கப்பட்ட நடிகை உட்பட சக நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்கள். 

 

 

இதை தொடர்ந்து நடிகை ரம்யா நம்பீசன் இதுகுறித்து அளித்த பேட்டியில்..."திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். இனியும் இதை எல்லாம் பொறுத்துகொண்டு இருக்க முடியாது. அதனால் விலகி விட்டோம். நாங்கள் நால்வரும் அந்தச் சங்கத்திலிருந்து விலகிய பின்னர் அவர்கள் எங்களுக்கு ஏதாவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் மற்ற பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். மேலும் இந்த விவகாரம் நடக்கும் வரை 'அம்மா' சங்கத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் நல்ல உறவு தான் இருந்தது. இப்போது அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாங்கள் அடுத்து முடிவெடுக்க வேண்டும்’" என்று கூறி இருந்தார்.

 

dileep

 

இந்நிலையில் நடிகர் திலீப் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது அம்மாவுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில்..."நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க உள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால் நான் எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கிக் கொண்டேன். இதில் இருந்து நிரபராதி என்று விடுதலையாகும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது" என்று எழுதி சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

 

 

இதையடுத்து மேலும் 14 நடிகைகள் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக தற்போது மிரட்டல் விடுத்திருப்பது மலையாள பட உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்