கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'ட்ரான்ஸ்' திரைப்படம். 2019ஆம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியாகிவிடும், ஈத் பண்டிகைக்கு வெளியாகிவிடும், டிசம்பர் வெளியாகிவிடும் என பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு இறுதியில் 2020ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று கன்ஃபார்மாக ரிலீஸாகிவிடும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. அவர்களின் நேரமோ என்னமோ தெரியவில்லை அதுவும் கடைசி நேரத்தில் கேரள தணிக்கை குழுவால் தடைப்பட்டது. 'இந்தப் படத்தில் மத ரீதியாக குறிப்பிட்ட சாராரை புண்படுத்தும் வண்ணமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அதனால் 17 நிமிடங்கள் வரை படத்தில் கட் செய்ய வேண்டும். இல்லையென்றால் மும்பைக்கு சென்று ரிவைஸிங் கமிட்டியில் படத்தை காட்டி தணிக்கை வாங்கிக்கொள்ளுங்கள்' என்றது தணிக்கை குழு. அதன் பிறகும் காட்சிகளை கட் செய்ய இஷ்டமில்லாத இயக்குனர் அன்வர் ரஷீத் ரிவைஸிங் கமிட்டியிடம் படத்தை காட்டி தணிக்கை வாங்கி பின்னர் படம் ஃபிப்ரவரி 20ஆம் தேதி கேரளாவில் வெளியானது. அதன்பின் ஃபிப் 28ஆம் தேதி மற்ற மாநிலங்களில், நாடுகளில் வெளியானது, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக பலரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் இந்த ‘ட்ரான்ஸ்’ திரைப்படம்.
படத்தின் விமர்சனத்திற்குப் போவதற்கு முன்பாக இந்தப் படத்தின் தலைப்பான ட்ரான்ஸின் அர்த்தம் என்ன என்பதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன் (அர்த்தம் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்). 'ட்ரான்ஸ்' என்றால் தன்னைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம் செல்லாத மன நிலை; மெய்மறந்த நிலை என்று சொல்வார்களே அதுதான். சிறுவயதிலேயே தாயை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியுடனும் மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகுவேன் என்று நம்பிக்கையுடனும் வாழ்க்கை ஓட்டத்தை விழுந்து புரண்டு உருண்டோடும் விஜு பிரகாஷாக ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார். தன் தம்பி இறந்தவுடன் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துக்கத்திலும் தூக்கமின்றியும் வாடும் ஃபகத், மும்பைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என செல்கிறார். அதன்பின் கௌதம் மேனன், செம்பன் ஜோஸ் ஆகியோரை சந்திக்கிறார். ஃபகத்தின் வாழ்க்கையில் மிராக்கல் நடைபெறுகிறது. மக்களுக்கு தன்னுடைய பிரேயரின் மூலம் மிராக்கல்ஸ் உண்டாக்கும் போலி பாஸ்டராக மாறுகிறார். அதன்பின் அவர் நினைத்து பார்க்காதது போல வாழ்க்கையில் பல மிராக்கல்ஸ் நிகழ்கிறது, அவருக்கு மட்டும்தான் பக்தர்களுக்கு அல்ல. இதன்பின் அவருடைய வாழ்க்கையில் சில சறுக்கல்கள்... தவிர்க்க முடியாத பாஸ்டராக மக்கள் மனதில் இடம்பிடிக்க, அவர்களின் சந்தேகமற்ற நம்பிக்கையால் பல கோடிகளுக்கு சொந்தக்காரராகிறார். கதைப்படி அவரை ஆட்டுவிக்கும் இயக்குனர்களாக இருப்பவர்கள் கௌதம் மற்றும் செம்பன். இந்த நிலை தொடர்ந்ததா, மாறியதா? இதன்பின் என்ன ஆனது என்பதுதான் கதை!
இந்தப் படத்தின் தலைப்பான ‘ட்ரான்ஸ்’... அதன் பொருளை மையப்படுத்திதான் திரைக்கதை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு படத்தொகுப்பு முதலியானவற்றை செய்திருக்கிறார்கள். போதை பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு, அல்லது அவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு 'ட்ரான்ஸ்' பாடல்கள் குறித்து தெரிந்திருக்கும். கலைடாஸ்கோப்பில் வருவதுபோன்ற சித்திரத்தில், ஒரு மயக்கமான நிலைக்கு கொண்டு செல்லும் வித்தியாசமான இசை என அனைத்துமே ஒரு மாயை போல உணரவைக்கும் இசை. அந்த இசையுடன் வரும் வீடியோதான் ட்ரான்ஸ் வீடியோ பாடல். அதுபோன்ற டெக்னிக்கைதான் இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களில் பார்ப்பவர்களின் மன ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும் வகையிலும், குழப்பம், ஆர்வம் என பல எமோஷன்ஸ் நம்மை ஆட்கொள்ளும் வகையிலும் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவிலும் வித விதமான ஆங்கிளில் காட்சிப்படுத்த எடுக்கப்பட்ட மெனக்கெடலுக்கு சமமாக கலர் கிரேடிங்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது. ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனிங் திறமைக்கு தீனி போடும் வகையில் இந்தப் படத்தின் கான்செப்டும் இருப்பதால் செமயாக பண்ணியிருக்கிறார் ரசூல்.
படத்தின் முதல் பாதி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத வகையில் வேகமான ஓட்டத்துடன் மக்களை கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. நாம் நாள்தோறும் பார்த்து குழம்பும் விஷயங்களின் நாம் அறியாத பக்கங்களை ஆச்சரியப்படும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கிருத்துவ மதத்தில் உள்ள சில போலி மத போதகர்கள் செய்யும் கூத்தை நேரடியாக பேசியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் பாதி அதற்கு நேர் மாறாக மெதுவான தொலைதூரப் பயணமாக துவளவைத்துவிடுகிறது. இந்தப் பயணத்திற்கு முட்டுக்கட்டைபோட்டு வேறு பாதைக்கு திருப்பிவிட்டு, மீண்டும் முதலில் பயணித்த ரோட்டிற்கு அழைத்து வருவதுபோல இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்ட விநாயகத்தின் துணைக் கதை தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பொறுமையை மேலும் சோதித்தது.
ஃபகத்தின் சினிமா கிராஃப், ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களாலும் அதற்கு அவர் கொடுக்கும் நியாயமான நேர்த்தியான நடிப்பினாலும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் நல்ல நடிகர்களான சௌபின் சாஹிர், செம்பன் ஜோஸ், திலீஷ் போத்தன், விநாயகம் என ஒட்டுமொத்தமாக நடித்திருந்தபோதிலும் ஃபகத் தனியாக இவர்கள் அனைவரின் நடிப்பையும் மிஞ்சிவிட்டார். இயக்குனராகப் பார்த்து வந்த ஸ்டைலிஷ் கௌதமை, 'ஸ்வாகா'ன (swag) வில்லனாகக் காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் அன்வர் ரஷீத். இரண்டு வருடங்கள் கழித்து நடிக்க வந்திருக்கும் நஸ்ரியா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்.
இயக்குனர் அன்வர் ரஷீதை பலரும் பாராட்டுகிறார்கள், விமர்சிக்கவும் செய்கிறார்கள். காரணம், இந்தப் படத்தில் மதத்தை ஒரு போதைப்பொருளாக ஒரு கூட்டம் பயன்படுத்தி மக்களுக்கு அதை பழக்கப்படுத்தி காசு பார்க்கிறார்கள் என்பதை தைரியமாக எடுத்ததுதான். அந்தப் பாராட்டும், விமர்சனமும் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதிய வின்செண்ட் வடக்கனுக்கும் சேர வேண்டும். படம் எப்படி என்று கேட்டால் பலரும் பல விதமாக கலவையான விமர்சனங்களையே இந்தப் படத்தின் மீது வைக்கிறார்கள். அதைத்தான் நானும வைக்கிறேன். ஆனால், இந்தப் படத்தில் பல விஷயங்களை மறைமுகமான பொக்கிஷத்தை போல ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் போகப் போக அனைவருக்கும் புரியலாம். அப்படி காலம் ஓடிய பின் கொண்டாடப்படும் படங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் ட்ரான்ஸும் இடம் பிடிக்கும் என்று தோன்றுகிறது.
எது எப்படியோ... இந்தப் படத்தின் மூலம் இரண்டு விஷயங்கள் உறுதியாகின்றன. ஒன்று, மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தை, கூத்தை, இதுவரை வேறு எந்த மொழியிலும் சொல்லாத விதத்தில் சொல்லியிருக்கும் தைரியம் அவர்களுக்கே உரியது. இன்னொன்று இத்தனை பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு தைரியமாக ஒரு படத்தை சோதனை முயற்சிபோல செய்ய மலையாள சினிமாவால்தான் முடியும். இந்திய சினிமாத்துறைகளில் மலையாள சினிமாவின் வளர்ச்சியானது தென்கொரிய சினிமா வளர்ந்திருப்பதுபோல எதிர்காலத்தில் வளரும் என்பதை ட்ரான்ஸ், ஜல்லிக்கட்டு போன்ற மலையாள படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
முந்தைய படம்: மலையாளத்தில் ஒரு 'சைக்கோ' படம்! இது எப்படி இருக்கு? பக்கத்து தியேட்டர் #9
அடுத்தப் படம்: மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11