தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இந்த படம் இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாதவன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், " உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், ஆரியப்பட்டா, நட்சத்திரம், கோள்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் அந்த காலத்திலே கணித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் அதுக்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாதவன், "கண்டிப்பாகத் தொடர்பு இருக்கு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33வது முறைதான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது, அவர்களது ராக்கெட் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும். இருந்தாலும் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. இதற்காக பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது" என்றார்.