கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் எனப் பல்வேறு மொழிகளில் பயணித்துள்ளார் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற தலைப்பில் இயக்கியதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.
இப்படம் கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர்.
இதையடுத்து சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருது அறிவிப்பில் சிறந்த படம் என்ற பிரிவில் 'ராக்கெட்ரி' படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.