ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் வட இந்தியாவில் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங், இரண்டாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது.
ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இன்டஸ்ட்ரியல் கிரேன் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் தப்பித்துள்ளனர். மேலும், திரையுலகினர் பலரும் 'இந்தியன் 2' படபிடிப்பு பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதலும் கூறினர். இதைத் தவிர்த்து, இனிமேல் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் குழுமத் தலைவர் சுபாஸ்கரனுக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், இனிமேல் தயாரிக்கும் படங்களில் கதாநாயகன் தொடங்கி கடைநிலை ஊழியரின் பாதுகாப்பு வரையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் படபிடிப்பு தளங்களில் இருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள லைகா நிறுவனம், “விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உங்களின் கடிதம் கிடைத்த 22ஆம் தேதிக்கு முன்பாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்.
அனுபவம் வாய்ந்த தலைசிறந்த கலைஞர்களான கமல், ஷங்கரின் கட்டுப்பாட்டில் இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெறுவதால் பாதுகாப்பில் எந்தவொரு பிரச்சனையம் ஏற்படாது என நம்பினோம். ஆனால், எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.
மேலும், ஷூட்டிங்கில் உரிய பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கமலுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.