இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. தமிழகத்தில் பாதிப்பு அளவைப் பொறுத்து, மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறை பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி என அழைக்கப்படும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஊரடங்கு காரணமாக நெருக்கடியைச் சந்தித்துவரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவியளித்து வருகிறது.
ஃபெப்சி அமைப்பின் இந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ஃபெப்சி அமைப்பிற்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.1 கோடி நன்கொடையளித்துள்ளது. சில தினங்களுக்கு முன், முதல்வரின் நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் ரூ.2 கோடி நன்கொடையளித்தது குறிப்பிடத்தக்கது.