தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. படங்களில் மட்டுமல்லாது பக்தி பாடல்களும் பாடியுள்ளார். அம்மன் கோவில்களில் இவரது பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது. 70 வருடங்களுக்கு மேலாக இசை துறையில் பயணிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி, தற்போது வெளியாகும் பாடல்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் எல்.ஆர்.ஈஸ்வரி கூறுகையில், "சமீபத்தில் ஊ சொல்றியா மாமா... பாடலைக் கேட்டேன். இதெல்லாம் ஒரு பாடலா. அந்த பாடலை நான் பாடியிருந்தால் அந்த தன்மை முற்றிலும் மாறியிருக்கும். இப்போது வருகிற பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை. புதிதாக வரும் பாடகர்களுக்கு என்ன தெரியும். இசையமைப்பாளர்கள் அதை சரிபார்த்து அவர்களை கச்சிதமாகப் பாட வைக்க வேண்டும். பழைய நாட்கள் வேறு. எங்கள் பாடல்கள் இன்றுவரை உன்னதமானதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கிறது" என்றார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா மாமா...' இடம் பெற்றிருந்த நிலையில் அதில் சமந்தா குத்தாட்டம் போட்டிருப்பார். இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதே சமயம் இப்பாடலின் வரிகள் ஆண்களைத் தவறாகக் கூறுவதாக சில விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில் மூத்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி இவ்வாறு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே பாணியில் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய 'கலா சலா கலசலா...' (ஒஸ்தி), 'நான் பூந்தமல்லிதா... புஷ்பவல்லிதா...' (தடையறத் தாக்க) உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.