லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலை படக்குழு வெளியிடவுள்ளது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் எல்சியுவில் 10 படங்கள் எடுத்து முடித்தவுடன் திரைத்துறையிலிருந்து விலகி விடுவேன் எனத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “நிறைய படங்கள் பண்ண வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. நான் யுனிவர்ஸ் உருவாக்குவதற்கு உதவிய நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அது அவ்வளவு எளிமையானது அல்ல. அதனால் யுனிவெர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்பை நியாயமாக சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்சியுவில் 10 படங்கள் இயக்கிவிட்டு திரைத்துறையிலிருந்து விலகிவிடுவேன்” எனக் கூறியுள்ளார். லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு படங்கள் இந்திய அளவில் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு லோகேஷ் கனகராஜை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.