இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறும் படம் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து தற்போது குறுகிய காலத்திலே முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.
இதனிடையே பா.ரஞ்சித்தின் கூகை நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், “இன்னும் 5 வருஷத்துக்கு முழு நீல ரொமான்ஸ் படம் எடுக்க முடியாது.எனென்றால் எல்லார்கிட்டையும் அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். எனக்கு ஹைப்பர் லிங்க் பாணி நன்றாக வருவதால் அதை வைத்து முதல் படத்தை எடுத்தேன்” என்றார். பின்பு பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது குறித்து பேசுகையில், “மாநகரம் முடித்த போது விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது என்னிடம் கதை எதுவும் இல்லாததால் அதை விட்டுவிட்டேன். பின்பு கைதி பண்ணும் போதும் வாய்ப்பு வந்தது. அப்போது என்னிடம் ஒரு ஒன் லைன் இருந்தது. அதை சொல்லித்தான் ஓகே வாங்கி பின்பு கதையை மெருகேற்றினேன். மாஸ்டர் படம் சேலஞ்சை மீறி விஜய் பட வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து எடுத்ததுதான்”என்றார்.
ஆக்ஷன் காட்சிகள் குறித்து பேசுகையில், “நான் எடுக்கனும்னு நினைச்ச ஆக்ஷன் படம் இன்னும் எடுக்கவில்லை. கைதி படம் சென்சாருக்கு போன போதே அந்த பிரச்சனை இருந்தது. அதுக்கு அப்புறம் எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என தெரிந்து விட்டது. அதே போல் நாம் நினைத்ததை அப்படியே பெரிய நடிகர்களை வைத்து எடுத்து விட முடியாது. ‘கில் பில்’ போல ஒரு படத்தை நம்ம ஊருக்கு ஏற்றது போல் இங்க எடுக்க நினைத்தால் அதை ரிலீஸ் பண்ண முடியாது. அது போன்ற வன்முறை காட்சிகள் இங்கு எடுக்கவும் முடியாது.” என்றார்.
பின்பு லியோ குறித்து பேசுகையில், “லியோ படத்திற்கு பார்த்திபன் என்று தான் முதலில் டைட்டில் வைத்தோம். ஆனால் அது ரொம்ப மென்மையாக இருந்ததால் மாற்றினோம். எதிர்காலத்தில் ஒருவேளை லியோ 2 எடுக்கும் வாய்ப்பு அமைந்தால் பார்த்திபன் தான் டைட்டிலாக இருக்கும்” என்றார். எல்.சி.யு. குறித்து பேசுகையில், “கூலி படம் எல்.சி.யு.வில் வராது. ஆனால் அதுக்கு அப்புறம் எடுக்கும் கைதி படம் எல்.சி.யு.வி-ன் உச்சகட்ட படமாக இருக்கும். அதில் எல்.சி.யு-வில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் வரும்” என்றார்.