Skip to main content

சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி! கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன?

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

rw

 

கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாகக் கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் முதலமைச்சருக்கு, சமூக விலகலைப் பின்பற்றி ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இன்று இந்தக் கோரிக்கையை ஏற்று, சின்னத்திரைக்கு மட்டும் சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடைபெற முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் படக்குழு கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின் வருமாறு... 
 

 

*சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.

 

*பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. எனினும் ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

 

*பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

 

*படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

 

*படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

 

*படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

*படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அதேபோன்று படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
 


*சளி இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்பப் பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்.

 

*அதிகபட்சமாக நடிகர் நடிகை தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

 

*சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

 

*மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

படப்பிடிப்பிற்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது'' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்