நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, “ஓர் அற்புதமான படைப்பு” என பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் லிங்குசாமி கலந்து கொண்டு பேசுகையில், “ஒரு சிலருக்கு முதல் படமே பெரிய ஹிட்டாக அமைந்து விடுகிறது. ஆனால் இன்னும் சிலருக்கு நாலு ஐந்து படங்கள் ஆகிறது. நந்தா பெரியசாமி என்னிடம் ஆனந்தம் படம் ஒர்க் பன்னும் போது, படம் இயக்க தகுதியாகிவிட்டார். ஆனால் அவருக்கு எதுவும் அமைந்து வரவில்லை. அவர், ‘ஒரு கல்லூரியின் கதை’ பண்ணும்போது மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்தது. ஆனாலும் சின்ன குறைகள் இருந்தது. தி.மாணிக்கம் படம் தியேட்டரில் பார்த்துவிட்டேன். மீண்டும் பார்த்த போது அவ்வளவு பெரிய சந்தோஷம். முழுமையாக எல்லா விதத்திலும் சரியான ஒரு படத்தை நந்தா பெரியசாமி எடுத்துவிட்டார்.
பாரதிராஜா, எடுத்த படத்தை திரும்ப திரும்ப பஞ்சு சாருக்கு போட்டு காட்டுவதாக சொல்வார்கள். அப்படி போட்டு காட்டி கரெக்ஷன் பண்ணி தான் அவர் படம் ரிலீஸாகும். அது போல நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் என நெருங்கியவர்களிடம் படத்தை போட்டு காட்ட வேண்டும். பையா படம் அப்படி போட்டு பார்த்து விட்டு கிளைமாக்ஸ் மாத்தி திருப்பி ரூ.1 கோடி செலவில் ஷூட் பண்ணோம். அதனால் தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். புது விஷயங்கள் இணைக்கப்படும். அப்படித்தான் நல்ல படங்கள் உருவாகிறது.” என்றார். இப்படத்தை லிங்குசாமி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.