தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் லிங்குசாமி, தமிழ்நாடு அரசையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மூன்று நாட்களாக தஞ்சாவூரில் இருந்ததால், சென்னை வர விமானங்கள் இல்லை. சென்னை நிலவரத்தைப் பார்த்து கவலையடைந்தேன். நேற்றிரவு நான் திரும்பி வந்தபோது, அடையாறில் ஒருவரை ட்ராப் செய்ய போயிருந்தேன். விமான நிலையத்திலிருந்து அடையாறு மற்றும் வளசரவாக்கம் திரும்பும் அனைத்து வழிகளிலும், தமிழக அரசு, அதிகாரிகள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது” எனக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சியை டேக் செய்திருந்தார்.
மேலும், “2015 வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இது சரியான திசையில் முன்னேற்றம் என்று கூறலாம். தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து பலரை மீட்பதில் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இதற்கு என்னால் இயன்ற வழிகளில் நகர அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பார்த்திபன் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரும் மிக்ஜாம் புயல் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். பார்த்திபன், “கட்சி பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இதுபோன்ற இடர் காலங்களில் அக்கம் பக்கம் உள்ள இளைஞர்கள், தாய்மை நிறைந்தவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளே தண்ணீருக்கிடையில் தாகம் தீர்ப்பதாகும். அப்படிப்பட்ட ரியல் ஹீரோ/ ஹீரோயின் அனைவரின் பாதம் தொட்டு நன்றியுடன் வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்கர் பச்சான், “மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதுதான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான், உங்களை உயர்த்திவிடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தனர்.