'அழகிய கண்ணே' படத்தில் நடித்த ஹீரோ லியோ சிவக்குமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் படத்தில் உடன் நடித்த சஞ்சிதாவிடம் எதைப் பற்றி கேட்டாலும் தியானம் செய்யுங்கள் என்று சொல்வார். தியானத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு அவருக்கு. அப்பா திண்டுக்கல் லியோனியைப் பொறுத்தவரை அவர் மேடையில் எப்படி இருப்பாரோ அதேபோல் தான் வீட்டிலும் இருப்பார். மிகவும் ஜாலியான மனிதர் அவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். வீடு முழுக்க புத்தகங்களாகத் தான் இருக்கும். அவருடைய படிக்கும் பழக்கம் தான் அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளது. அப்பாவின் ஆசீர்வாதத்துடன் தான் சினிமாவுக்கு வரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி முடித்து சினிமாவுக்கு வரவேண்டும் என்று நான் சொன்னபோது, முதலில் இந்த உலகை நான் புரிந்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொன்னார். எனவே சிறிது காலம் எடுத்துக்கொண்டு பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன்.
காமெடி, சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சிதாவுடன் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகளில் தான் நிறைய சிரமப்பட்டேன். சூது கவ்வும் படம் போல் இந்தப் படமும் சஞ்சிதாவுக்கு மிகப்பெரிய பிரேக்காக இருக்கும். இந்த படத்தில் உடன் நடித்த விஜய் சேதுபதி சார் இந்த நிமிடம் வரை எதற்கும் மறுப்பு தெரிவித்ததில்லை. அவருடைய சப்போர்ட் மிகப் பெரியது. அவருடைய ஆபீஸில் ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்து, அவருடைய சொந்த காஸ்டியூமில் வந்து நடித்துக் கொடுத்தார். நல்ல மனிதர் அவர்.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் சார் சூப்பராக ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடலில் நான் நடிப்பது பெருமையான விஷயம். ரகுநந்தன் சாரின் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. என்னுடைய பொறுப்பு அதிகமாகியுள்ளது. கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்பது ஆசை.