தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இதுதான் தொழிலாளர்கள் நலனுக்கான அரசா…? தமிழ்நாடு அரசே தொழிலாளர்கள் விரோத மாசோதாவை கைவிடு" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவில் அவர் தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சி.வி.கணேசனை டேக் செய்துள்ளார்.