கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்த ராகவா லாரன்ஸ் தற்போது நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் ஒருவர் கண்ணீர் மல்க உதவி கேட்டு வெளியிட்ட ஒரு விடியோவைக் குறிப்பிட்டு அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
![fef](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Fhia9Qkj0FVoi3-DbLPSFY373O6TOCYM7ZAVcHdhss/1587118753/sites/default/files/inline-images/Untitled-13_1.jpg)
"இப்போதுதான் இந்த வீடியோவைப் பார்த்தேன். இதை எனக்கு அனுப்பிய நடிகர் உதயாவுக்கு நன்றி. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள். யூனியனிலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எனக்கு ஏராளமான வீடியோக்கள் வருகின்றன. தனி ஆளாக என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாராவது உதவி செய்ய விரும்பினால் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரு ரூபாய் கூட உதவிகரமாக இருக்கும். சேவையே கடவுள்" எனப் பதிவிட்டுள்ளார்.