பல படங்களில் தன்னுடைய குரலின் மூலம் நம்முடைய மனதில் ஆழமாகப் பதிந்த டப்பிங் கலைஞர் லக்ஷனா ராஜீவ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
குஷி படத்தில் விஜய் சாருக்கும் ஜோதிகா மேடமுக்கும் அவர்களுடைய குழந்தை வயது அழுகுரலாக வருவது என்னுடைய குரல்தான். அம்மா, குஷி படத்தின் டப்பிங்குக்கு சென்றபோது குழந்தையான என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது நான் அழுதபோது என்னுடைய குரலைப் பதிவு செய்து படத்தில் பயன்படுத்தினர். சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பயணித்ததால் எனக்கும் டப்பிங் மீது ஆர்வம் வந்தது. முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அம்மாவின் அறிவுரைக்கிணங்க நல்ல பயிற்சி பெற்று டப்பிங் துறையில் நுழைந்தேன்.
செக்கச் சிவந்த வானம் படத்தில் முதன்முதலில் கூட்டத்துக்கு டப்பிங் பேசினேன். ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறேன். பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தேன். '96' படத்தில் சிறுவயது த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம். சுந்தரி சீரியலுக்கு டப்பிங் கொடுத்தது சவாலான அனுபவமாக இருந்தது. கிராமத்து ஸ்டைலில் அந்த சீரியலில் நான் டப்பிங் பேசுவதற்கு அதன் குழு எனக்கு மிகவும் உதவியது. விசுவாசம் படத்தில் வில்லனுடைய மகளுக்கு டப்பிங் கொடுத்தேன். சிவா சார் மிகவும் சப்போர்டிவாக இருந்தார்.
கார்ட்டூன்களில் குரலை மாற்றிப் பேச வேண்டிய தேவை ஏற்படும். விரும்பி செய்வதால் இவை அனைத்துமே எனக்குப் பிடித்தவை தான். நெட்பிலிக்ஸ் சீரிஸ் ஒன்றிலும் டப்பிங் செய்துள்ளேன். ஒரு பெரிய படத்திலும் டப்பிங் பேசியிருக்கிறேன். அது குறித்த தகவலை விரைவில் தெரிவிக்கிறேன்.